பிரயாக்ராஜ்: முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிக் அகமது குறைந்தது ஒன்பது முறை சுடப்பட்டதாக உடற்கூறாய்வு அறிக்கை கூறுகிறது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பிருந்த ஆதிக் அகமதும் அவர்தம் சகோதரர் அஷ்ரஃப் அகமதும் கடுங்காவல், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைவாசத்தை நிறைவேற்றி வந்தனர்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக இருவரும் சனிக்கிழமை பிரயாக்ராஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதனை முடித்துக்கொண்டு வெளியில் வந்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர்.
அப்போது செய்தியாளர்களின் போர்வையில் இருந்த சிலர் அவர்களை அருகிலிருந்து சுட்டுக்கொன்றனர். இந்நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.
இந்நிலையில், தலையில் ஒருமுறையும் கழுத்து, முதுகுப் பகுதிகளில் எட்டு முறையும் ஆதிக் சுடப்பட்டது உடற்கூறாய்வில் கண்டறியப்பட்டது. அதுபோல, முகத்தில் ஒருமுறை, முதுகில் நான்கு முறை என அஷ்ரஃப் ஐந்து முறை சுடப்பட்டார்.
மருத்துவர் ஐவர் கொண்ட குழுவின் உடற்கூறாய்வு நடவடிக்கை காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டது. பின்னர் சகோதரர்கள் இருவரின் உடல்களும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவர்களின் சொந்த ஊரில் புதைக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பில், லவ்லேஷ் திவாரி, 22, மோகித் சிங் என்ற ஷானி, 23, அருண் குமார் மௌரியா, 18 என்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அம்மூவரும் ஏற்கெனவே குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
புகழ்பெற வேண்டும் என்பதற்காகச் சகோதரர்கள் இருவரையும் சுட்டுக்கொன்றதாக முதற்கட்ட விசாரணையின்போது அவர்கள் கூறியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும், கூலிப்படைகளாக அவர்கள் செயல்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது.

