சுயேச்சை வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,662 கோடி; பரப்புரைக் களம் விழாக்கோலம்
பெங்களூரு: கர்நாடகாவில் இம்முறை அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வர வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். அவர்களில் ஆக அதிகமான சொத்துகளைக் கொண்டவர்கள் பட்டியலில் பாஜக வேட்பாளர் எம்டிபி நாகராஜ், கர்நாடகா காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட பலர் இடம்பிடித்துள்ளனர்.
கர்நாடக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக உள்ள எம்டிபி நாகராஜ் ஒசக்கோட்டை தொகுதியில் பாஜக சார்பில் களம் காண்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.1,510 கோடி ஆகும்.
2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது நாகராஜின் சொத்து மதிப்பு ரூ.1,015 கோடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சொத்து மதிப்பு ரூ.495 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் அவரது மனைவிக்கும் ரூ.1,347 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இவர்களுடைய சொத்து மதிப்பு ரூ.507 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேசமயம் இருவருக்கும் ரூ.260 கோடி கடன் இருப்பதாகவும் தமது வேட்புமனுவில் டி.கே.சிவகுமார் குறிப்பிட்டு உள்ளார்.
பாஜக, காங்கிரஸ், பிற கட்சிகள் சார்பில் போட்டியிடும் மேலும் பல வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
இதனிடையே, அரசியல் கட்சி வேட்பாளர்களை விஞ்சும் வகையில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் கோடிக்கணக்கில் சொத்து வைத்துள்ளார்.
சிக்பேட்டை தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்கும் கே.ஜி.எப்.பாபு என்பவரின் மனைவி சஜியா தரணின் சொத்து மதிப்பு ரூ.1,662 கோடியாகும். தமக்கு தொகுதி ஒதுக்கும்படி காங்கிரஸ் கட்சியிடம் பாபு விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதனால் தனது மனைவியை களமிறக்கி உள்ளார். கர்நாடகத்தில் பணக்கார வேட்பாளராக சஜியா உள்ளார்.
கர்நாடகாவில் தேர்தல் களம் களைகட்டத் தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிப் பிரமுகர்களும் தொண்டர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கட்சித் தொண்டர்கள் இடையே பரப்புரையின்போது சில மோதல்களும் வெடித்துள்ளன. இதையடுத்து பதற்றம் நிலவும் பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.