புதுடெல்லி: வாரணாசி நகரில் தனது நூறாவது ஜி20 துணை மாநாட்டை நடத்தி இந்தியா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று ஜி20 மாநாட்டுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய தலைமையின் கீழான இந்த மாநாட்டுக் கூட்டங்களில் இதுவரை 111 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுவினர் பங்கேற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
அனைத்து கூட்டங்களிலும் நல்ல முறையில் விவாதங்கள் நடந்துள்ளதாகவும் இதுவரை நூறு மாநாட்டுக் கூட்டங்களை இந்தியா நடத்தி உள்ளது என்றும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
"நாட்டின் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இதுவரை 41 வெவ்வேறு நகரங்களில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
"இந்தியாவின் சிறப்பு அழைப்பின் பேரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழுக்கள் மாநாட்டுக் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றன," என்றார் ஹர்ஷ் வர்தன்.
நாடு முழுவதும் மேலும் 60 நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஜி20 அமைப்புக்கான தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் அம்மாநாடு தொடர்பான கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

