சண்டிகர்: அரிசி ஆலை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஹரியானாவில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக நேற்று மாலை இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹரியானா மாநிலம், கர்னல் பகுதியில் உள்ள மூன்று தளங்களைக் கொண்ட அரிசி ஆலையில் நேற்று அதிகாலை விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திடீரென அந்த ஆலை இடிந்து விழுந்தது.
அப்போது நிறைய ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். சிலர் ஆலையின் ஒரு பகுதியில் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.
இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடியவர்கள் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பினர். இந்நிலையில் விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நேற்று காலை முதல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.
மேலும் பல பணியாளர்கள் ஆலையில் இருந்து வெளியேற முடியாமல் இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் எனக் கூறப்படும் நிலையில், மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த இருபது பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

