பாட்னா: மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பெண் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரி தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பாட்னா அருகே உள்ள பிஹ்தா பகுதியில் சட்டவிரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக எழுந்த புகாரை அடுத்து அங்கு ஆய்வு நடத்த சுரங்கத் துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் அங்கு சென்றார்.
அங்கு ஏராளமான லாரிகளில் மணல் கடத்தப்படுவதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்த நிலையில், கடத்தல்காரர்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர்.
பெண் அதிகாரியைக் கீழே தள்ளிவிட்டு, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தார் ஒருவர். சிலர் அவர் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
பெண் அதிகாரியுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற இரண்டு ஆய்வாளர்களும் தாக்குதலுக்கு ஆளாகினர்.
அப்போது கடத்தல்காரர் ஒருவர் கைப்பேசியில் எடுத்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதையடுத்து 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.