செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
a2923fe6-93e9-4d51-a664-81206c8776a9
-

மருத்துவ குணம் கொண்ட பழங்கள்: இலவசமாக வழங்கும் விவசாயி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற விவசாயி அரிய மருத்துவக் குணங்கள் கொண்ட பழங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இவருக்குச் சொந்தமான பண்ணையில் சுமார் முந்நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த கடுக்காய் மரம் உள்ளது. ஆண்டுதோறும் அதில் இருந்து 400 கிலோ வரை பழங்கள் கிடைக்கிறதாம். அவற்றின் சந்தை மதிப்பு ஏறத்தாழ ரூ.2.5 லட்சமாகும். அவற்றை தேவை உள்ள நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் இலவசமாகத் தந்துவிடுகிறார் கிருஷ்ணா.

கல்லூரி வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவி; ஒருவர் கைது

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான ரோஷினி அகர்வாலை அடையாளம் தெரியாத சிலர் கல்லூரி வளாகத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வணிகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ரோஷினி நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்ப இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கல்லூரி வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த ரோஷினியைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சில நிமிடங்களில் உயிரிழந்தார். இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ரயிலில் தீ வைப்பு: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: ேகரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைதாகி உள்ள ஷாருக் சைபி மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளது. இதனிடையே அவர் இணையத்தளங்களில் காணப்்படும் பயங்கரவாத பயிற்சி தொடர்பான காணொளிகளைத் தொடர்ந்து பார்த்து வந்ததுள்ளதாக இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரும் கேரள காவல் துறை கூடுதல் இயக்குநருமான எம்.ஆர்.அஜித்குமார் தெரிவித்துள்ளார். "அத்தகைய காணொளிகளால் ஷாருக் சைபி மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார். அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்ற அவர் கேரளா வந்துள்ளார். அவர் செய்துள்ள குற்றம் தொடர்பான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளோம். அவர் வேறு யாரிடமாவது ஏதேனும் உதவி பெற்றாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்," என்று அஜித்குமார் மேலும் கூறியுள்ளார்.

ஆதிக் அகமது கொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட குண்டர் கும்பலைச் சேர்ந்த ஆதிக் அகமது மரண வழக்கு தொடர்பில் தன்னாட்சி விசாரணைக் குழு ஒன்றை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனு ஒன்றில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2017 முதல் இதுவரை 183 என்கவுன்டர் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இதனிடையே ஆதிக் அகமது கொலைச் சம்பவம் குறித்து விசாரிக்க பிரயாக்ராஜ் நகர காவல் ஆணையர் ரமித் சர்மா உத்தரவின் பேரில், மூன்று பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று: ராட்சத விளம்பரப் பலகை சரிந்து ஐவர் உயிரிழப்பு

புனே: மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் பலத்த காற்று வீசியதில் ராட்சத விளம்பரப் பலகை சரிந்து விழுந்த சம்பவத்தில் நான்கு பெண்கள் உள்பட ஐந்து பேர் மாண்டனர். மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை ஒன்றில் நேற்று முன்தினம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பலத்த காற்று வீசியதை அடுத்து சிலர் அந்த இரும்பு விளம்பரப் பலகையின் அடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.