பிரதமர் மோடி கேரளா செல்கிறார்
திருவனந்தபுரம்: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு வரும் 24ஆம் தேதி கேரளா செல்கிறார்.
கேரளாவில் 'வந்தேபாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். கேரளாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் பிரதமர் மோடியை கொச்சியில் வரவேற்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
'நீட்' தேர்வுக்கு 20.8 லட்சம் பேர்
புதுடெல்லி: தேசிய மருத்துவ வாரிய சட்டத்தின் கீழ் செயல்படும் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை, முதுநிலை பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தி வருகிறது. வரும் மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது.
இதுவரை 'நீட்' தேர்வுக்கு 20.8 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 11.8 லட்சம் பேர் மாணவிகள். கடந்த ஆண்டைவிட இது 2.57 லட்சம் கூடுதலாகும். மகாராஷ்டிராவில் 2.8 லட்சம் பேரும் உத்தரப்பிரதேசத்தில் 2.7 லட்சம் பேரும் விண்ணப் பித்துள்ளனர். ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
அயோத்தியில் வில்லுடன் ராமர்
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கருவறையில் வில் ஏந்திய ராமரின் உருவச் சிலை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை உறுப் பினரான தீர்த்த பிரசன்யாச்சாரியா, அடுத்த ஆண்டு மகர சங்கராந்தியின்போது புதிய ராமர் சிலை நிறுவப்பட உள்ளது என்றார். "புதிய ராமர் சிலை ஐந்து அடி உயரத்தில் வில்-அம்பு தாங்கிய தோற்றத்தில் இருக்கும். கர்நாடகாவில் இருந்து தருவிக்கப்படும் 'கிருஷ்ண சிலா' எனப்படும் அபூர்வ வகை கருங்கல்லில் மைசூரைச் சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் ராமர் சிலையை வடிப்பார்," என்றும் அவர் தெரிவித்தார்.

