விஜயவாடா: வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து விசாகப்பட்டினம் தலைநகரமாகச் செயல்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசக் கட்சி விஜயவாடா அருகில் இருக்கும் அமராவதியை ஆந்திராவின் தலைநகராக அறிவித்தது.
இதையடுத்து மத்திய அரசு நிதியுதவியுடன் அமராவதியில் சட்டமன்றம், தலைமைச் செயலகம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கான குடியிருப்புகளும் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த தேர்தலில் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் மேம்பட வேண்டும் என்பதால் சட்டமன்றத் தலைநகராக அமராவதியும் நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினமும், நீதித்துறை தலைநகராக கர்நூலும் இருக்கும் என்று அறிவித்தார்.
ஆனால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவிப்புக்கு அமராவதியில் தலைநகரம் அமைக்க சுமார் 31,000 ஏக்கர் நிலத்தை கொடுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீகாகுளத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, இனிமேல் ஆளும் கட்சியினர் இங்கு நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளார்.

