புதுடெல்லி: இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 12,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது, எட்டு மாதங்களில் இல்லாத புதிய உச்சமாகும். மத்திய சுகாதார அமைச்சு நேற்று இந்த விவரத்தை வெளியிட்டது.
செவ்வாய்க் கிழமை அன்று பாதிப்பு 7,633ஆக இருந்த நிலையில் மறுநாள் புதன்கிழமை 10,542ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று மேலும் அதிகரித்து தினசரிப் பாதிப்பு 12,000ஐத் தாண்டியிருப்பது கடந்த 8 மாதங்களில் இதுவே முதல் முறை.
தினசரி பாதிப்பு விகிதம் 5.46 விழுக்காடாகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 5.32 விழுக்காடாகவும் உள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 3,106 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரே நாளில் 1,767 பேருக்குத் தொற்று உறுதியானது.
அரியானா, மகாராஷ்டிரா உட்பட நான்கு மாநிலங்களில் பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் 907 பேரும் தமிழ்நாட்டில் 542 பேரும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் தேவையான தடுப்பூசி களை இருப்பில் வைத்திருக்க மாநில அரசாங்கங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில் பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையில் நடந்த கூட்டத்தில் நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு, தளவாடங்கள், மருந்துகள் போன்றவை தயார் நிலையில் வைப்பது மற்றும் தடுப்பூசியில் கவனம் செலுத்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் பேசிய பி.கே.மிஸ்ரா, உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகத் தேவையான கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

