புனே: இந்தியாவில் சிறைப் பாதுகாப்பு, கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள சிறைகளின் பாதுகாப்புக்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு அடுத்தபடியாக பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மராட்டியத்திலும் இதே போன்று வானூர்திகளைப் பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்திற்கு பிறகு இந்த வசதியை பெறும் 2வது மாநிலம் மராட்டியம்.
இது பற்றி விளக்கமளித்த சிறைத் துறையின் ஏ.டி.ஜி.பி. அமிதாப் குப்தா, சிறைகளில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
"சிறைகளில் கைதிகளின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்கு என்னென்ன நடக்கின்றன என்பது பற்றி கண்காணிக்கும் நோக்கிலும், அவர்களுடைய பாதுகாப்பை கவனத்தில் கொண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வெவ்வேறு சிறைகளில் பதற்றமுள்ள பகுதிகளில் இவற்றைக் கொண்டு கண்காணிக்கும் பணி நடைபெறும்.
இரவு நேரத்திலும் செயல்படும் திறன் வாய்ந்த கேமராக்களுடன் அவை இயங்குவதால் கூடுதலாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உதவும் என்று சிறைத் துறை அதிகாரி திரு அதிதாப் குப்தா மேலும் தெரிவித்தார்.

