விமானி அறையில் தோழி; ஏர் இந்தியா விசாரணை

2 mins read
490e0e0d-d420-44be-ad3e-bd78aef55d25
படம்: ராய்ட்டர்ஸ் -

புதுடெல்லி: பறந்துகொண்டிருந்த விமானத்தின் விமானி அறைக்குள் தோழியை அனுமதித்த ஏர் இந்தியா விமானியை நிர்வாகம் விசாரித்து வருகிறது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதியன்று துபாயிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற விமானத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த ஒருவர், விமான நிறுவனத்திடமும் 'டிஜிசிஏ' எனும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமும் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து விசாரணை தொடங்கியது.

விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ, வெள்ளிக்கிழமையன்று (21 ஏப்ரல்) விமானியையும் விசாரணைக்கு அழைத்திருந்தது.

தனது தோழிக்கு வரவேற்பு அறை போன்ற அனுபவத்தை வழங்க விமானி விரும்பியதாகவும் தலையணை, சிறப்பு உணவு, மதுபானம் போன்றவற்றைத் தோழிக்காக விமானி பெற்றுத் தந்ததாகவும் புகாரில் பயணி கூறியுள்ளார்.

"விமானி அறையில் முதன்மை கண்காணிப்பாளர் இருக்கையில் தோழி ஒரு மணிநேரத்துக்கு மேல் அமர்ந்திருந்தார். ஏர் இந்தியா விமானம் 'AI915' விமானத்தின் விமானிகள் தாமதமாக வந்து பயணிகளுடன் ஏறினர்," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

"சாதாரண வகுப்பில் பயணம் செய்த தோழியை வர்த்தகப் பிரிவுக்கு மாற்ற விமானி விரும்பினார். ஆனால் வர்த்தகப் பிரிவு நிரம்பியிருந்தது. இருந்தாலும் வர்த்தகப் பிரிவில் வழங்கப்படும் சிறப்பு உணவு உள்ளிட்ட சேவைகளைத் தோழிக்கு வழங்க விமானி ஏற்பாடு செய்ததார்," என்று பயணி தெரிவித்திருந்தார்.

இச்சம்பவத்தை விசாரித்து வரும் டிஜிசிஏ, "இது, விமானப் போக்குவரத்து இயக்குநரக பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் செயலாகும். உண்மை நிலை ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தது.

ஏர் இந்தியா பேச்சாளர் ஒருவர், டிஜிசிஏ விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் இத்தகைய பாதுகாப்பு விதிமீறல்களைப் பொறுத்துக் கொள்ளமுடியாது என்றும் விமானிமீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.