புவனேஷ்வர்: ஓய்வூதியம் பெறுவதற்காக எழுபது வயது மூதாட்டி ஒருவர் பல கிலோ மீட்டர் தூரம் வங்கிக்கு நடந்தே செல்கிறார்.
ஒடிஷாவின் ஜாரிகான் மாவட்டத்தில் உள்ள பனுவகுடா கிராமத்தில் இந்த அவலச் சம்பவம் நடந்துள்ளது.
நப்ரங்பூர் பகுதியில் உள்ள வங்கிக்கு கொளுத்தும் வெயிலில் வெறுங்காலுடன் ஒரு உடைந்த நாற்காலியின் உதவி யுடன் அவர் நடந்து சென்றதாக இண்டியா டுடே தகவல் தெரிவித்தது.
சூர்யா ஹரிஜன் என்ற அந்த மாது தள்ளாடித் தள்ளாடி சாலையில் தன்னந்தனியாக நடந்துசெல்லும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் பல இருந்தாலும் அவை உரியவர்களைச் சென்றடைவதில்லை.
ஏழ்மை நிலையில் வசித்து வரும் சூர்யா ஹரிஜனின் மூத்த மகன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வேறொரு மாநிலத்தில் குடியேறி பணியாற்றி வருகிறார்.
அவரது இளைய மகன் அவருடன் தங்கி கால்நடைகளை மேய்த்து வாழ்வாதாரத்துக்கு உதவி வருகிறார். குடிசையில் வசிக்கும் மூதாட்டியின் வாழ்க்கை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
இதற்கு முன்பு ஓய்வூதியம் அவரது கைக்கு வந்து சேர்ந்தது. ஆனால் தற்போது நடைமுறைகள் மாறிவிட்டன. அவரது ஓய்வூதியம் அவரது வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படுகிறது.
இதனால் வங்கிக்கு நேரடியாகச் சென்று அவர் தனது கைநாட்டை அதிகாரி முன்பு பதிவு செய்தால்தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. சில சமயங்களில் அவரது கைரேகை வங்கி ஆவணத்துடன் ஒத்து இல்லாமல் வித்தியாசமாக இருப்பதால் ஓய்வூதியம் மறுக்கப்படுகிறது. இப்படி கடந்த நான்கு மாதங்களாக அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப் படுகிறது. சூர்யா ஹரிஜனுக்கு வயதாகிவிட்டதால் பலவீனமாகி விட்டார். ஓர் உடைந்த நாற்காலி உதவியுடன் அவர் நடந்து செல்கிறார். உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் முறையிட்டும் அவருக்கு உதவி கிடைக்க வில்லை. இந்நிலையில் வீட்டுக்கு ஓய்வூதியம் வந்து சேர ஏற்பாடு செய்வதாக உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் சிலர் அவருக்கு உறுதியளித்துள்ளனர்.