பூஞ்ச்: இந்தியா முழுவதும் நேற்று நோன்புப் பெருநாளை இஸ்லாமியர்கள் உற்சாகமாகக் கொண்டாடிய வேளையில் காஷ்மீரில் உள்ள ஒரு குக்கிராமத்தில் மட்டும் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவில்லை.
பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ஐந்து ராணுவ வீரர் களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சாங்கியோட் கிராம மக்கள் கொண்டாட்டங்களைத் தவிர்த்தனர்.
சென்ற வியாழக்கிழமை ராணுவ வாகனம் ஒன்று பாலாகோட்டில் உள்ள பசூனி ராணுவ தலைமையகத்தில் இருந்து பழங்கள் உள்ளிட்ட பொருள்களுடன் சாங்கியோட்டில் நடைபெறவிருந்த இஃப்தார் விருந்துக்குப் புறப்பட்டுச் சென்றது. அதில் ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த ஆறு வீரர்கள் பயணம் செய்தனர்.
அந்த வாகனம், பிம்பர் காலி என்ற பகுதியில் இஃப்தார் விருந்துக்காக மேலும் சில பொருள்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் கையெறிக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அருகிலுள்ள பட்டா துரியனி லிருந்து ராணுவ வீரர்களும் கிராமவாசிகளும் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்தபோது, ஐந்து வீரர்களும் கருகிக் கிடந்தனர். ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். வாகனத்திலிருந்த பழங்கள், உணவுப் பொட்டலங்கள் சிதறியிருந்தன.
இந்தத் தாக்குதல் தங்களுடைய கிராமத்தில் நடந்ததால் சாங்கியோட் மக்கள் கவலை அடைந்தனர். ரமலான் பண்டிகையைக் கொண்டாடப்போவ தில்லை என்று அவர்கள் முடிவு செய்தனர்.
"துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஐந்து வீரர்கள் உயிரிழந்த நிலையில் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவது. எங்களுக்கு அந்தச் சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததுமே கிராமம் முழுவதும் கவலை தொற்றிக்கொண்டது. நாங்கள் நோன்புப் பெருநாளுக்கு தொழுகை மட்டுமே செய்கிறோம். மற்றபடி கொண்டாட்டங்களைத் தவிர்க்கிறோம்," என்று கிராமத்தின் தலைவரான முக்தியாஸ் கான் தெரிவித்தார். தாக்குதலில் காயமடைந்த ரஜோரி என்ற வீரர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை தொடர்ந்து பாட்டாடோரியா எனும் அடர்ந்த வனப்பகுதியில் வானூர்தி, மோப்ப நாய்களைக் கொண்டு பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளைத் தேடி வருகின்றனர். 'ஜெய்ஷ்' என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டது.

