லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் லக்னோ- கோரக்பூர் நெடுஞ்சாலையில் தனியார் பயணிகள் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் ஏழு பேர் மாண்டனர். நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் பேருந்து பக்கவாட்டில் சாய்ந்தது.
வெள்ளிக்கிழமை மாலை அயோத்தியிலிருந்து அம்பேத்கார் நகரை நோக்கிச் சென்ற பேருந்து சாலையில் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது.
எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது.
இதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
உடனடியாக உள்ளூர் நிர்வாகம் மீட்புப் பணியில் இறங்கியது.
"காயம் அடைந்த 12 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். மீட்புப் பணிகள் முடிந்துவிட்டன," என்று அயோத் தியா மாவட்ட நீதிபதி நிதிஷ் குமார் தெரிவித்தார்.
இதற்கிடையே உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் மாவட்ட நிர்வாகத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

