காட்மாண்டு: நேப்பாளத்தில் அன்னபூர்ணா மலைப்பாதையில் காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் அனுராக் மாலு மூன்று நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
அவரது உடல் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்ப தாகவும் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது சகோதரர் சுதிர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர் நகரைச் சேர்ந்த அனுராக், 34, திங்கள்கிழமை அன்னபூர்ணா மலையில் இருந்து இறங்கும் போது முகாம்-IIIல் இருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்துவிட்டார். அவர் விழுந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 6,000 மீட்டர் உயரத்தில் உள்ளது.
அன்னபூர்ணா மலை உலகின் 10வது உயரமான மலையாகும்.
"அவர் உயிருடன் மீட்கப்பட்டாலும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எங்கள் கவனம் முழுவதும் அவர் விரைவில் குணமடைவதில்தான் உள்ளது," என்று அனுராக் மீட்கப்பட்ட செய்தியை விவரித்த அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சுதிர் மாலு குறிப்பிட்டார்.
மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த குழு அவர் ஆழமான பள்ளத்தில் இருந்ததைக் கண்டுபிடித்ததாக அவர் சொன்னார். சென்ற வியாழக்கிழமை ஏழு நேப்பாள மலையேறிகள் அனுராக்கை 300 மீட்டர் ஆழமான பள்ளத்தில் இருந்து அவரைக் காப்பாற்றியுள்ளனர் என்று 'செவன் சம்மிட் டிரெக்ஸ்' என்ற அமைப்பின் தலைவர் மிங்வா ஷெர்பா தெரிவித்தார்.
இந்த மீட்புச் சம்பவம் மில்லியனில் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.
போலந்தின் பிரபல மலையேறும் வீரர் ஆடம் பிலேக்கி மற்றும் அவரது நண்பரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அனுராக் விழுந்துகிடந்த இடத்திற்கு மூன்று நேப்பாளிகள் மற்றும் ஒரு போலந்து மலை ஏறுபவர் இறங்கினர்.
அவர்கள் அனுராக் உயிருடன் இருப்பதைக் கண்டறிந்தனர். அதன் பிறகு மீட்புக் குழுவினர் அவரை பள்ளத்தில் இருந்து மெதுவாக வெளியே கொண்டு வந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுராக் மாலு 2010 ஆம் ஆண்டில் டெல்லி ஐஐடியில் பி.டெக் முடித்துள்ளார்.

