போபால்: மத்திய பிரதேச
அரசின் இலவச திருமணத்
திட்டத்தின் கீழ், மணப்பெண்
களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பெண்களை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் 219 ஏழை ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
கடாசரை நகரில் நேற்று முன்தினம் நடந்த இந்நிகழ்ச்சியில் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளுக்குத் தலா ரூ.56 ஆயிரம் நிதியுதவியும் அளிக்கப்பட்டது.
இந்த மணப்பெண்களில் ஐவருக்கு கர்ப்ப பரிசோதனை நேர்மறையாக வந்த பிறகு, அவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
அந்த ஐவரில் ஒருவர், "எனது கர்ப்ப பரிசோதனை நேர்மறையாக வந்தது. இதன் காரணமாக எனது பெயர் இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இருப்
பினும் அதிகாரிகள் எனக்குத் தெளிவான காரணத்தைத் தெரிவிக்கவில்லை," என்று கூறினார்.
அதன் தொடர்பாக கருத்துரைத்த பச்சர்கான் கிராமத்தின் சர்பஞ்ச் மேதானி மராவி, கடந்த காலங்களில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டதில்லை. இப்போது தங்கள் குடும்பத்தின் முன் நிற்கும் பெண்களுக்கு இது அவமானம் என்று கூறினார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் கண்டன டுவிட்டில், "இந்தச் செய்தி உண்மையா என்பதை முதலமைச்
சரிடமிருந்து நான் அறிய விரும்புகிறேன். இந்தச் செய்தி உண்மையாக இருந்தால், யாருடைய உத்தரவின் பேரில் மத்திய பிரதேசத்தின் மகள்களுக்கு இந்தக் கொடூரமான அவமதிப்பு செய்யப்பட்டது?
"ஏழைகள், பழங்குடியின மக்களின் மகள்களுக்கு முதல்வர் பார்வையில் கண்ணியம் இல்லையா? சிவராஜ் ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மத்திய பிரதேசம் ஏற்கெனவே நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
"இந்த முழு விவகாரத்திலும் நியாயமான, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இது கர்ப்ப பரிசோதனை விவகாரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண் இனத்தின் மீதான தீங்கான அணுகுமுறையும் ஆகும்," என்று பதிவிட்டு உள்ளார்.
திண்டோரியின் தலைமை மருத்துவ, சுகாதார அதிகாரி டாக்டர் ரமேஷ் மராவி கூறுகையில், "வயது சரிபார்ப்பு, ரத்த சோகை, உடல் தகுதியைக் கண்டறிய பொதுவாகச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
"அவர்களில் சிலர் மாத
விலக்கு சரிவர வரவில்லை என்று கூறியதால் உயர் அதி
காரிகளின் உத்தரவின் பேரில், சந்தேகத்திற்குரிய சில பெண்களுக்குச் சோதனை செய்யப்பட்டபோது, அவர்களில் ஐவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ள தடுத்து வைக்கப்பட்டனர். இந்த நிலையில், உள்ளாட்சி நிர்வாகமும் மாநில அரசும் கர்ப்ப பரிசோதனை செய்து பெண்களை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது," என்று தெரிவித்துள்ளார்.

