புதுடெல்லி: உள்நாட்டுப் போர் நடைபெறும் சூடான் நாட்டில் இருந்து 4,000 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்திய ராணுவத்தின் இரண்டு விமானங்களும் ஒரு கப்பலும் தயார் நிலையில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தியாவும் சூடானில் உள்ள சுமார் 4,000 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முயற்சி எடுத்து
வருகிறது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C-130J விமானங்கள் தற்போது சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் தயார் நிலையில் உள்ளன.
மேலும், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா (INS Sumedha) கப்பலும் சூடான் துறைமுகத்தை அடைந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
"சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. பாதுகாப்பாக இருப்பது, தேவையற்ற நடமாட்டத்தைக் குறைத்து ஆபத்தைத் தவிர்ப்பது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.
"சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
"இந்தியர்களின் பாதுகாப்பு நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
"சூடானில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நாங்கள் பல தரப்பினரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டு வருகிறோம்," என வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்து இருப்பது பலரையும் நிம்மதி அடைய வைத்திருக்கிறது.

