ஒரேபாலின திருமண விவகாரம்
கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டு ஒரேபாலின திருமணத் தம்பதிகளின் திருமண உரிமையைச் சட்ட ரீதியாக அங்கீகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்பாகத் தன்பாலினத்தவர் இடையேயான திருமணம் போன்ற நிலையான உறவுகளை தாங்கள் சிந்தித்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார். இதனிடையே ஒரேபாலினத் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பாக 10 நாட்களுக்குள் கருத்துகளைத் தெரிவிக்க கடந்த 19ஆம் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியது. இதனால் ஒரேபாலின திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கப்படலாம் என்று பரவலாகக் கருத்து எழுந்துள்ள நிலையில், பார் கவுன்சில் தலைவர் மணன் குமா மிஸ்ரா, "ஒரேபாலின திருமணங்களால் நாட்டின் கலாசாரம், சமூக கட்டமைப்பு சிதையும். எனவே உச்சநீதிமன்றம் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். முக்கிய பிரச்சினையான இவ்விவகாரத்தை நாடாளுமன்றம், சட்டமன்றம் வசம் விட்டுவிட வேண்டும்," என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தல்காரர்களுக்கு துணைபோன அதிகாரிகளின் வேலை பறிபோனது
திருவனந்தபுரம்: கேரளாவில்தான் தங்கம் கடத்தல் பெருமளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்க சுங்க இலாகாவினரும் வருவாய் புலனாய்வுத் துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் தங்கம் கடத்தல் குறைந்தபாடில்லை. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் கோழிக்கோடு விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் சிக்கினர். அவர்கள் மீது இடைநீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் கடத்தல் தொடர் கதையாகவே உள்ளது. தீவிரமாக விசாரணை செய்ததில் மேலும் ஒன்பது சுங்க இலாகா அதிகாரிகள் பிடிபட்டனர். அவர்களை மீது சி.பி.ஐ. விசாரணையைத் தொடர்ந்து அவர்களை வேலையில் இருந்து நீக்கி, விசாரணை நடத்தி வருகிறது.
ஆலை தீ விபத்தில் மூவர் பலி
மும்பை: மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் ஹிங்காராவில் தனியார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாயினர். தீவிபத்தில் படுகாயம் அடைந்த மேலும் மூன்று ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி வீடுகளில் சோதனை
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி கங்காதர் கவுடாவுக்கு சொந்தமான 2 வீடுகளிலும் தட்சின கன்னடாவில் அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்திலும் வருமானவரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

