புதுடெல்லி: டெல்லியில் 13 லட்சம் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, இலவசப் பேருந்துப் பயண வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர் துறை கூட்டத்தில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் அவற்றை அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொழிலாளர் துறையில் ரூ.4,000 கோடி வரை செலவு செய்யாமல் வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.
அந்தத் தொகை, டெல்லியின் ஒவ்வொரு தொழிலாளரையும் சென்றடையும் வகையில் திட்டங்கள் அமைக்கப்படவில்லை என அவர் அதிருப்தி தெரிவித்தார்.
எனவே 13 லட்சம் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்வதற்கான அனுமதியும் வழங்கி முதல்வர் உத்தரவிட்டார்.
ஜூன் மாதத்திற்கு முன்பாக டெல்லியின் தொழிலாளர்கள் அனைவரையும் பதிவு செய்ய வும் ஒரு வாரத்திற்குள் 60 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களை அடையாளம் கண்டு ஓய்வூதியம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். குறுந்தகவல் மூலம் தொழிலாளர் துறையின் பலன்கள் குறித்து எடுத்துரைக்கும்படி அவர் கூறினார்.