தண்டேவாடா: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில், நக்சல்கள் நடத்திய பயங்கர தாக்குதலில், 11 காவல்துறையினர் வீரமரணம் அடைந்தனர். உயிரிழந்த வீரர்களின் இறுதிச் சடங்கு சத்தீஸ்கரில் நேற்று நடந்தது.
முதல்வர் பூபேஷ் பாகல் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு வீரரின் உடல் இருந்த சவப்பெட்டியை தன்னுடைய தோளில் தூக்கிச் சென்றார்.
"வீரர்களின் தியாகம் வீண் போகாது. நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவத்தில் 2 நக்சலைட்டு களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்," என்றார் பூபேஷ்.
பாதுகாப்புப் படையினரைத் திட்டமிட்டு உள்ளே அழைத்து 50 கிலோ வெடிமருந்தைப் பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மாவோயிஸ்டுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். இம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் இந்தியப் பாதுகாப்பு படையினர் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மாவோயிஸ்டுகள் இதுவரை நடத்திய தாக்குதலில் மிகக் கொடூரமானது 76 பாதுகாப்பு படையினரை பலிகொண்ட 2010ஆம் ஆண்டு தாக்குதல்.