புதுடெல்லி: எல்லைப் பகுதி களில் பாதுகாப்புத் தொடர்பான ஒப்பந்தங்களை மீறக்கூடாது என தலைநகர் டெல்லியில் தம்மைச் சந்தித்துப் பேசிய சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷாங்ஃபூவிடம் மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் வலியுறுத்தினார்.
ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. ராஜ்நாத் சிங் விடுத்த அழைப்பை ஏற்று பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாடு தொடங்குவதற்கு முன்னர் தஜகிஸ்தான், ஈரான், கஸகஸ்தான் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்களைக் கைகுலுக்கி வரவேற்ற ராஜ்நாத் சிங், சீன அமைச்சர் லீ ஷாங்ஃபூவை சந்தித்தபோது கைகுலுக்காமல் வணக்கம் தெரிவித்தார். அதன்பிறகு இருவரும் இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்தும் இருதரப்பு நல்லுறவுக்கான மேம்பாடுகள் குறித்தும் வெளிப்படையாக விவாதித்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஷாங்காய் கூட்டமைப்பின் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசியபோது, "பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையுடன் போராட வேண்டும். இந்த அமைப்பு வலுப்பெற வேண்டுமெனில் ஒன்றிணைந்து போராடுவது அவசியம். புதிய வழிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ள பயங்கரவாதிகளை முறியடிக்க, இவ்வமைப்பை வலுப்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது," எனத் தெரிவித்தார்.

