பெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு கல்புர்கியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியா ழனன்று பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடியை 'விஷப் பாம்பு' என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
"காங்கிரசாரின் தரம் தாழ்ந்த விமர்சனத்துக்கு மக்கள் தேர்த லில் தக்க பாடம் புகட்டுவார் கள்," என குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், "நான் பிரதமர் மோடியை அவ்வாறு குறிப்பிடவில்லை. பாஜகவின் கருத்துகள் விஷப் பாம்பை போன்றது என்றுதான் சொல்ல வந்தேன். எனது கருத்து யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்," என கார்கே தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கர்நாடகாவின் 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இருநாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) கர்நாடகாவுக்கு வருகை அளிக்கும் பிரதமர் மோடி, மாநிலத்தின் பிதார், பெலகாவி மாவட்டப் பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.
அதேபோல், இன்று முதல் காங்கிரஸ் கட்சிக்காகப் பிரசாரம் செய்யப் போவதாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நேற்று தெரிவித்தார். அவர் தனது மனைவி கீதா சிவராஜ்குமாருடன் சோரபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மது பங்காரப்பாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளார்.
மது பங்காரப்பாவும் கீதா சிவராஜ்குமாரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.பங்காரப்பாவின் பிள்ளைகள் ஆவர்.
இதனிடையே, உடுப்பி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து, மீனவர்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறினார். மீனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, மீனவப் பெண்களுக்கு வட்டியில்லாக் கடன், மானிய விலையில் டீசல் உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

