புதுடெல்லி: இந்திய மற்போர் வீராங்கனைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக இந்திய மற்போர் கூட்டமைப்புத் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராகப் புகார் செய்யப்பட்டுள்ளது.
பிரிஜ் பூஷணுக்கு எதிராக இந்திய மற்போர் வீரர்கள் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல் மட்டுமின்றி நிதி முறைகேடு, முறையற்ற நிர்வாகம் ஆகியவை குறித்து வீரர்கள் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மற்போர் வீரர்களில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பஜ்ரங் பூனியாவுடன் நட்சத்திர வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
புதுடெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதியன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, இம்மாதம் 23ஆம் தேதியன்று மீண்டும் போராட்டக் களத்திற்கு அவர்கள் திரும்பி உள்ளனர்.
"புகார் செய்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. எங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதனாலேயே நாங்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம்.
"எங்களுக்கு நியாயம் வேண்டும். குற்றப் பத்திரிகையைக் கூட அதிகாரிகள் பதிவு செய்யவில்லை.
"டெல்லி மகளிர் ஆணையம் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கிறோம்," என்று இந்திய மற்போர் வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்தார்.
இந்நிலையில், தங்களுக்கு உணவு மற்றும் குடிநீர் தரவிடாமல் காவல்துறையினர் நெருக்குதல் தருவதாகப் போராட்டத்தில் ஈடுபடும் மற்போர் வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போராட்டம் நடைபெறும் இடத்தில் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் போராட விரும்பினால் சாலையில் படுத்துக்கொள்ளுங்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காகப் பதக்கம் வென்ற மற்போர் வீரரான பஜ்ரங் பூனியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே, போராட்டம் நடத்தும் மற்போர் வீரர்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர்் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
"இந்திய மற்போர் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மற்போர் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் செய்ததைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார் என எனக்குத் தோன்றவில்லை. அவர் இந்த மற்போர் வீரர்கள் மீது அக்கறை கொண்டிருந்தால் அவர்களைச் சந்தித்துப் பேசி இருப்பார். பாதிக்கப்பட்ட மற்போர் வீரர்களுக்கு நாட்டு மக்கள் துணையாக நிற்கின்றனர். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக இந்த மற்போர் வீரர்கள் குரல் எழுப்பியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்," என்றார் பிரியங்கா காந்தி.
இது ஒருபுறம் இருக்க, தாம் எவ்வித தவறும் செய்யவில்லை என்று பிரிஜ் பூஷண் அடித்துக்கூறுகிறார்.
தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

