செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a6729dfa-c2bb-4d31-89b7-fc5523051bcd
-

சூடானிலிருந்து நாடு திரும்பிய மேலும் 231 இந்தியர்கள்

புதுடெல்லி: சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையிலான சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேற ஏதுவாகப் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டுக் குடிமக்களைக் கப்பல்கள், விமானங்கள் ஆகியவை மூலம் மீட்டு வருகின்றன. இந்திய விமானப் படையின் சி-130 ஜே ரக விமானம், சி-17 ரக போக்குவரத்து விமானம், இரண்டு கடற்படைக் கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட செய்தியில், புதுடெல்லியில் தரையிறங்கிய மற்றொரு விமானம் மூலம் மேலும் 231 இந்தியர்கள் சூடானிலிருந்து சொந்த நாடு திரும்பியுள்ளதாக பதிவிட்டு உள்ளார்.

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு; குஜராத்தில் விசாரணை

புதுடெல்லி: மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பின் காரணமாக ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை குஜராத் செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்ததற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி முறையீடு செய்தார். இந்த மனு குஜராத் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கோயில் நிர்வாகம்: ஷீரடி சாய் பாபா கோயில் மூடப்படவில்லை

மும்பை: ஷீரடி சாய் பாபா கோயிலைப் பாதுகாக்க இந்தியாவின் மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படை நிறுத்தப்படுவதாகவும் அதனால் கோயில் நிர்வாகம் அதிருப்தி அடைந்து நாளை முதல் கோயிலை மூடுவதாகவும் செய்திகள் வெளியாகின.

இதற்குக் கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோயில் பூஜைகள், சடங்கு சம்பிரதாயங்கள் வழக்கம்போல் தொடரும் என்று அது நேற்று உறுதி அளித்தது. கோயில் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் மருத்துவமனைகள் உட்பட பல்வேறு வசதிகள் தொடர்ந்து எப்போதும் போல செயல்படும் என்று கோயில் நிர்வாகம் நேற்று கூறியது.