தூங்கியதால் வேலை பறிபோனது
குஜராத்: குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கட்ச் மாவட்டத்தின் பூஜ் நகராட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்த 14 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் விதமாக அவர்களுக்கான வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பூஜ் நகராட்சி முதன்மை அலுவலர் ஜிகார் படேல் தூங்கியது புகைப்படக் கருவியில் பதிவானது. அதனையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
'பதவி விலகமாட்டேன்'
புதுடெல்லி: இந்திய மற்போர்
வீராங்கனைகள் தங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக
இந்திய மற்போர் கூட்டமைப்புத்
தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"இந்தச் சர்ச்சையின் பின்னணியில் தொழிலதிபர் ஒருவரும் காங்கிரஸ் கட்சியும் இருப்பதாக நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். ஏனெனில், அவர்கள் என் மீது கோபத்தில் இருக்கிறார்கள். பதவியை ராஜினாமா செய்வதற்கு நான் குற்றவாளி அல்ல. நான் ராஜினாமா செய்தால் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும்.
"உண்மையில் கடந்த நான்கு மாதங்களாக அவர்கள் மற்போர் விளையாட்டிற்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். நான் 12 ஆண்டுகளாக இந்திய மற்போர் கூட்டமைப்பின் தலைவராக இருக்கிறேன். நான் பாலியல் குற்றம் இழைத்திருந்தால் காவல் நிலையத்தில் இதுவரை யாரும் ஏன் புகார் அளிக்க வில்லை? சட்டத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்," என்று கூறினார்.
ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. தற்கொலை
திருவனந்தபுரம்: கேரளாவில் உம்மன்சாண்டி முதல்வராக இருந்த காலத்தில் நடந்த சோலார் பேனல் ஊழல் வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. ஹரிகிருஷ்ணன் 60, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
முதல்வராக இருந்த உம்மன்சாண்டிக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்தது சோலார் பேனல் ஊழல்.
இந்த ஊழலால் கேரள சட்டசபையில் பல நாள்களுக்கு அமளி ஏற்பட்டது. இவ்வழக்கை பெரும்பாவூரில் அப்போது டி.எஸ்.பி.யாக இருந்த ஹரிகிருஷ்ணன் விசாரித்தார்.
அண்மையில் இவர் ஓய்வு பெற்றார். நேற்று காலை ஹரிப்பாடு ஏலுார் பகுதியில் தண்டவாளத்தில் ரயில் மோதி இறந்த நிலையில் கிடந்தார்.
ஹரிப்பாடு போலிசார் உடலைக் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். அவரது சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. விவரம் தெரிவிக்கவில்லை. அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

