பெங்களூர்: ஆண்டுக்கு மூன்று முறை எரிவாயு உருளைகள், தினந்தோறும் அரை லிட்டர் பால், மாதத்துக்கு ஐந்து கிலோ அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் என கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி இலவச அறிவிப்புகளை பாஜக அரசு அள்ளி வீசியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இம்மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் சூழலில், அறிக்கையை பாஜக நேற்று வெளியிட்டது.
மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை முன்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிக்கையை வெளியிட்டார்.
அதன்படி, பாஜகவின் முக்கிய அறிவிப்பாக கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை இலவச சமையல் எரிவாயு உருளைகள், தினமும் அரை லிட்டர் பால் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உகாதி புத்தாண்டு, வினாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய மூன்று பண்டிகை காலங்களின்போது எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஒவ்வொரு மாநகராட்சியிலும் குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், மாநிலத்தில் உள்ள 10 லட்சம் வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் கர்நாடகாவில் உள்ள பழமையான கோயில்களை ரூ.1,000 கோடி செலவில் புணரமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் வழக்கு ஒன்றில் தேர்தல் சமயத்தில் இலவசங்களை வாக்குறுதிகளாக கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக, இப்போது இலவச வாக்குறுதிகளை அள்ளி வழங்கியிருப்பது மக்கள் பலரிடமும் பேசுபொருளாக மாறியுள்ளது.

