புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் புகார் கூறியுள்ள ஒரு பதின்ம வயதுப் பெண் (மைனர்), இதர ஏழு பெண் மல்யுத்த வீரர் களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் பாதுகாப்பு அளித்து வருகிறோம் என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக வாக்குமூலங்களை விரைவில் பதிவு செய்யுமாறு புகார்தாரர்களைத் தாங்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டில் தங்களுக்கு நியாயம் கிடைப்பது ஆசியக் கிண்ண போட்டியில் பதக்கங்களை வெல்வதைவிடவும் மிகப்பெரும் சவாலாக இருப்பதாக மல்யுத்த வீராங்கனைகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
பிரபல மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், வினோஷ் போகத் உள்ளிட்ட ஏழு பேர், இந்திய மற்போர் கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் தங்களைப் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் குற்றம்சாட்டி, அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.
அப்போது குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைத்து பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வு காணப்பட்டது. அதன்பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த வாரம் முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாலியல் புகார் விவகாரத்தில் இதுவரை அமைதி காத்து வந்த டெல்லி காவல்துறையினர், உச்ச நீதிமன்றத்தின் அறுவுறுத்தலை அடுத்து, பிரிஜ் பூஷண் சிங் மீது இரு வெவ்வேறு தகவல் அறிக் கைகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தான் யாருக்கும் பாலியல் தொந்தரவு தரவில்லை என்று மறுத்துள்ள அவர், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக வீராங்கனைகள் செயல்படுவ தாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

