புதுடெல்லி: கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு இந்தியாவில் உள்ளூர் விமானப் போக்கு வரத்து சக்கைப்போடு போடுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாள்தோறும் ஏறத்தாழ 456,082 இந்தியர்கள் உள்ளூர் அளவில் விமானங்களில் பயணம் செய்கின்றனர்.
ஆக அதிகமாக கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியன்று இந்தியாவில் 2,978 உள்ளூர் விமானப் பயணங்கள் பதிவாகின.
உள்ளூர் விமானச் சேவை அதிகரிப்பு இந்தியாவின் பெருமளவிலான வளர்ச்சியைக் காட்டுவதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் அந்நாட்டில் விமானப் பயணங்களின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது. இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவில் உள்ளூர் விமானச் சேவைகளை வழங்கும் விமானங்களில் 37.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஓராண்டுக்கு முன்பு பதிவான எண்ணிக்கையைவிட இது 51.7 விழுக்காடு அதிகம் என்று இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
"கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது விமானப் போக்குவரத்து முடங்கியது. பயணம் செய்ய வேண்டும் என்று மக்களின் மனதில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த ஏக்கத்தின் வெளிப்பாட்டைத் தற்போது காண்கிறோம்," என்று பிபிசி செய்தி நிறுவனத்திடம் விமானப் போக்குவரத்து பகுப்பாய்வாளர் மார்க் மார்ட்டின் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதாக திரு மார்ட்டின் கூறினார்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், அந்நாட்டின் விமானப் போக்குவரத்து இருமடங்கு அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருவதாக அவர் விவரித்தார்.
இந்தியாவின் உள்நாட்டு விமானச் சேவை மிகச் சிறப்பான முறையில் மீண்டுவரும்போதிலும் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் விலை அதிகரிப்பு, அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு இறக்கம் கண்டிருப்பது, பயன்படுத்தப்படாமல் விமான நிலையத்திலேயே முடங்கிக்கிடக்கும் விமானங்கள் போன்ற காரணங்களால் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகிறது.
பிராட் அண்ட் விட்னி இயந்திரக் கோளாறு காரணமாக இண்டிகோ, கோஃபெர்ஸ்ட் போன்ற பிரதான இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான 50க்கும் அதிகமான விமானங்கள் பல மாதங்களாக முடங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்களுக்குப் பில்லியன் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

