வேலையின்மை அதிகரிப்பு
புதுடெல்லி: இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து இருப்பதாக 'சென்டர் பார் மானிட்டரிங் இந்தியா' என்ற ஆய்வு நிறுவனத்தின் ஏப்ரல் மாத பொருளியல் புள்ளிவிவர அறிக்கை தெரிவித்துள்ளது.
வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதம் 7.8% ஆக இருந்தது என்றும் அது ஏப்ரலில் 8.11% ஆக கூடிவிட்டதாகவும் அறிக்கை கூறியது.
மாலத்தீவுக்கு இந்தியக் கப்பல்
மாலே: இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு மாலத்தீவு சென்றார்.
அந்த நாட்டு அதிபர் இப்ராகிம் முகமது சோலி, இதர அமைச்சர்களுடன் இருதரப்பு உறவை மேலும் விரிவுபடுத்துவது குறித்து அவர் பேச்சு நடத்தினார். மாலத்தீவுக்கு விரைவு சுற்றுக்காவல் கப்பலை இந்தியா சார்பாக அவர் வழங்கினார்.
தெருவில் தங்க குல்ஃபி விற்கிறார்
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தெருவோர வியாபாரி, கழுத்தில் தங்க நகைகளை அணிந்துகொண்டு தெருத்தெருவாக 'தங்க குல்ஃபி' விற்கிறார். அதைக் காட்டும் காணொளி ஊடகத்தில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
குளிரூட்டிப் பெட்டியில் இருந்து குல்ஃபி துண்டு ஒன்றை எடுத்து (படம்) அதை 24 காரட் தங்க இலையில் பொருத்தி அதை ரூ.351க்கு அவர் விற்கிறார். ஆனால் பிரகாஷ் விற்பது உண்மையான தங்கமா போலியா என்பது தெரியவில்லை என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
புத்தாக்கம்: கர்நாடகா முதலிடம்
புதுடெல்லி: இந்தியாவிலேயே புத்தாக்கத்தைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக கர்நாடகா மாநிலம் முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வு கூறி இருக்கிறது.
தெலுங்கானா, தமிழ்நாடு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாட்டில் புத்தாக்க நிறுவனங்கள் விகிதம் முறையே 46.18%, 39.10%, 31.90% ஆகும். ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்கள் மிகவும் பின்னணியில் உள்ளன.

