புதுடெல்லி: 'தி கேரளா ஸ்டோரி' என்ற படத்தை வெளியிட தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனுவையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாளை 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு மனுவில், 'தி கேரளா ஸ்டோரி திரைப்பட முன்னோட்டக் காட்சிகளில் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்பு பேச்சு, பிரசாரங்கள் இடம்பெற்று உள்ளதாகவும் ஆகையால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அந்தப் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஓர் அமைப்பு தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மனுதாரர் கேரள உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதனிடையே, தி கேரளா ஸ்டோரி' படம் வெளியானால் கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பலாம் என்பதால் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

