இம்பால்: இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் அமைதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. மெய்தி சமூகத்தினரை 'எஸ்டி' எனப்படும் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் பழங்குடியினர் அமைதி ஊர்வலம் நடந்தபோது வன்முறை வெடித்தது.
இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன் ராணுவமும் அசாம் துப்பாக்கிப் படையினரும் பாதிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஐந்து நாள்களுக்கு இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் அனைத்து மாணவர்கள் அமைப்பு அமைதி ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து அம்மாநிலத்தின் வெவ்வேறு மலை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.
அப்போது பழங்குடியினருக்கும் பழங்குடி அல்லாதோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் இணையச் சேவையை முடக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து கிட்டத்தட்ட 4,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, மணிப்பூரில் அமைதியையும் இயல்புநிலையையும் மீட்டெடுக்க பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் டுவிட்டரில் 'எனது மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. தயவுசெய்து உதவிடுங்கள்' எனப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைப் பதிவில் குறிப்பிட்டவாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

