திருவனந்தபுரம்: வீட்டில் ஒரு சிறுவனை சித்திரவதை செய்ததாகக் கூறி கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் மலையாளப்புழா என்ற இடத்தில் பெண் மந்திரவாதி ஷோபனா என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட அந்த மாது பின்னர் பிணையில் வந்து மீண்டும் அதுபோன்ற மந்திரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்.
ஷோபனாவின் வீட்டிலிருந்து சிறுவன் ஒருவன் அழும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அப்பகுதியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திடம் தெரிவித்தனர்.
அவர்கள் பெண் மந்திரவாதியின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு அறையொன்றில் சிறுவன் ஒருவன் இருந்தான்.
தன்னையும் தன் பெற்றோரையும் பெண் மந்திரவாதி அடைத்து வைத்திருப்பதாக சிறுவன் கூறினான். காவல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிறுவனும் அவன் பெற்றோரும் மீட்கப்பட்டனர்.
மோசடி வழக்கு தொடர்பில் தம்மைக் காவலர்கள் கைது செய்ததால் அதிலிருந்து வெளிவர பெண் மந்திரவாதியின் உதவியைத் தாம் நாடியதாக சிறுவனின் தந்தை கூறினார்.
இருப்பினும், பெண் மந்திரவாதி ஏற்பாடு செய்த சிறப்புப் பூஜைக்கு அவர் பணம் தராத நிலையில் மூவரும் நான்கு நாள்களாக ஓர் அறையில் அடைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே தலைமறைவாகிவிட்ட அந்தப் பெண் மந்திரவாதியைக் காவல் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

