செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ce0df7a0-720e-4a73-bd8f-db508b7b7a86
-

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஏழு இடங்களில் சிபிஐ சோதனை

மும்பை: மும்பை நகரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள அலுவலகங்கள், வீடுகளில் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

கனரா வங்கியில் ரூ.538 கோடி அளவுக்கு மோசடி செய்ததாகக் கூறப்படும் புகாரின் தொடர்பில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல், முன்னாள் விமான நிறுவன இயக்குநர் கவுரங் ஆனந்த் ஷெட்டி ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் இந்தச் சோதனை தொடர்ந்தது.

தலைவராக சரத்பவார் நீடிக்க முடிவு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவாரே தொடர்ந்து நீடிக்கவேண்டும் என 15 பேர் கொண்ட உயர்மட்ட குழுக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் எதிர்காலத்திற்காகவும் புதிய தலைமையை உருவாக்குவதற்காகவும் தனது தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார், 82, கடந்த 2ஆம் தேதி அறிவித்திருந்த நிலையில், நேற்று மும்பையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் சரத்பவாரின் பதவி விலகலை ஏற்க முடியாது என்றும் அவரே தலைவராகத் தொடரவேண்டும் என முடிவாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இதையடுத்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூங்கில் தண்ணீர் பாட்டில் விற்பனை

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம் இப்போது சணல் பைகளுக்கு மாறியுள்ளது. அதேபோல், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு மாற்றாக மூங்கிலால் தயாரிக்கப்பட்ட பாட்டில்களை ரூ.30க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இரு ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை ராணுவப் படையினர் சுற்றிவளைக்க முற்பட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காயமடைந்த நான்கு ராணுவ வீரர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.