499 நகரங்களில் நீட் தேர்வு
சென்னை: மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்காக 499 நகரங்களில் அைமக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ மாணவிகள் நேற்று தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடந்தது. வன்முறை காரணமாக மணிப் பூரில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வி இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறியுள்ளார்.
ரூ.20 கோடி பணம் பறிமுதல்
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரூவின் பல்வேறு பகுதிகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக ஏறக்குறைய ரூ.20 கோடி அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோலார் மாவட்டத்தில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் நான்கரை கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்ட நிலையில், தற்போது 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகளுக்கு கொடுப்பதற் காக நிதி நிறுவனத்தினர் இப்பணத்தைப் பதுக்கி வைத்திருந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் பேரிடர் மேலாண்மை ஆணையம் பாரமுல்லாவில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்படலாம் என நேற்று எச்சரிக்கை விடுத்தது. பாரமுல்லா பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களைப் பின்பற்றவும் அடுத்த உத்தரவு வரும் வரை பனிச்சரிவு ஏற்படும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் அறி வுறுத்தப்படுகிறார்கள் என ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்பட்டபோதும் நிகழ்வில் தொடர்ந்து பேசிய அதிபர் முர்மு
ஒடிசா: ஒடிசாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சதேயோ பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், அதிபர் திரௌபதி முர்மு பேசும்போது திடீரென்று மின்சாரம் ஒன்பது நிமிடங்களுக்குத் தடைபட்டது. இருந்தபோதிலும், மேடையில் இருந்து வந்த ஒளியை வைத்து திரௌபதி முர்மு தனது உரையை பாதியாக நிறுத்தாமல் முழுமையாகப் பேசி முடித்தார். நிகழ்ச்சி முடிந்தபின்னர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்தோஷ் திரிபாதி நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
கழிவுநீரில் மிதந்த பணத் தாள்கள்
பாட்னா: பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் மிதந்ததால் கிராம மக்கள் வாய்க்காலுக்குள் குதித்து அவற்றை எடுத்துச் சென்றனர். இதுதொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. காலையிலேயே வாய்க்காலில் ரூபாய் நோட்டுகள் அடங்கிய பைகள் காணப்பட்டதால் அங்கு ஏராளமான மக்கள் கூடினர். ரூபாய் நோட்டுகள் உண்மையானதுதானா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

