அதிகமானோர் பயணம் செய்ததே விபத்துக்கான முக்கியக் காரணம் என தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உட்பட 22 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த நிலையில், மாயமானவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், தூவல்தீரம் கடற்கரையில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஈரடுக்கு சுற்றுலாப் படகு ஒன்று ஞாயிற் றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் தானூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, படகில் திடீரென விரிசல் ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் உடைந்து நொறுங்கியதால் பயணிகளுடன் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அலறல் சத்தத்துடன் கடலில் பலரும் தத்தளித்தனர்.
இதைப் பார்த்த அப்பகுதி மீன வர்கள் காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் உள்ளூர் மீனவர்களுடன் நீரில் தத்தளித்த பலரையும் மீட்டனர்.
குழந்தைகள், பெரியவர்கள் என பலர் மாயமானதாகக் கூறப்படும் நிலையில், படகு விபத்தில் ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் உயிரிழந்த தாகத் தகவல் தெரிவிக்கிறது.
உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டடுக்குப் படகில் மேல் அடுக்கில் இருந்தவர்கள் சிலர் காப்பாற்றப்பட்ட நிலையில், கீழ்ப்பகுதியில் இருந்தவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
படகில் அதிகமானோர் பயணம் செய்ததே விபத்துக்கான காரணம் என்றும் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விடிய விடிய மீட்புப் பணி தொடர்ந்த நிலையில், மாயமானவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
கேரளாவில் சுற்றுலாப் படகுப் பயணம் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்குள்ளான படகு இரவு 7 மணி வரை கடலில் பயணம் மேற்கொண்டது குறித்து விசாரணையும் நடந்து வருவதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்த ஒவ்வாருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதிபர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

