இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஒரு வாரமாக நீடித்து வந்த பதற்றம் தணிந்ததை அடுத்து, உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருள்களை வாங்க ஊரடங்கு உத்தரவு சில மணி நேரம் தளர்த்தப்பட்டது.
இதனால் இயல்பு வாழ்க்கை மெல்ல வழக்கநிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 23,000 பேர் மீட்கப்பட்டு ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தி, சிறுகச் சிறுகச் சேமித்து வாங்கிய பொருள்கள் அனைத்தும் தீவைத்து எரிக்கப்பட்டதாக வேதனைப்பட்டனர். வாழ்வாதாரம் இழந்துள்ள தங்களுக்கு உதவுமாறு அதிகாரிகளிடம் கதறி அழுது கேட்டுக்கொண்டது நெஞ்சை உலுக்கியது.
"மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம் காட்ட வில்லை. மணிப்பூர் மக்களும் இந்தியர்களே. அவர்களது பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் தயாராக உள் ளன," என்று வடகிழக்கு மாநிலங்களுக்கான அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
'இந்தியா டுடே' ஊடகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், "மணிப்பூர் சம்பவம் குறித்து அரசாங்கம் நல்ல முடிவை எடுக்கும். அதுவரை யாரும் அச்சப்படாமல் அமைதி காக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
கட்டணம் ஆறு முதல் எட்டு மடங்கு அதிகரிப்பு
மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகள் மணிப்பூரில் சிக்கியுள்ள மாணவர்கள், குடிமக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகின்றன.
மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன. ராஜஸ்தான் அரசாங்கம் 125 ராஜஸ்தானியர்களை இம்பாலில் இருந்து மீட்க உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். பிற மாநிலங்களைச் சேர்ந்த 240 மாணவர்கள் மணிப்பூரில் இருந்து வெளியேறிவிட்டனர். இம்பால்-கோல்கத்தா விமானக் கட்டணம் ரூ.22,000 முதல் ரூ.30,000ஆக வழக்கத்தைவிட 6 முதல் 8 மடங்கு விலை அதிகரித்துள்ளது. அத்துடன், இம்பாலில் இருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் அடுத்த சில நாள்களுக்கு முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.