புதுடெல்லி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது எனவும் மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்தான வழக்கில், தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட ஐவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
இதுகுறித்த தீர்ப்பை சந்திரசூட் வாசித்தபோது, டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க ஆளுநரைவிட மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் கையில்தான் உண்மையான நிர்வாக அதிகாரம் இருக்கவேண்டும். மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படாதது தவறு. டெல்லி அரசின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது. டெல்லியில் ஆளுநரைவிட முதல்வருக்கே அதிகாரம் உள்ளது. துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் என்ற மத்திய அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

