ஸ்ரீநகர்: காஷ்மீரை சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி பயங்கரவாத இயக்கத்தை கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (உபா) இந்த தடை விதிக்கப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்குத் தடை உத்தரவு அமலில் இருக்கும். இதற்கிடையே, தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி இயக்கம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்து வருவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) ரகசிய தகவல் கிடைத்தது.
எனவே, அதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காஷ்மீரில் அதிரடி சோதனை நடத்தினர்.
பட்கம், பாரமுல்லா ஆகிய மாவட்டங்களில் 11 இடங்களில் சோதனை நடந்தது.
காஷ்மீரில், ஜி20 நாடுகள் அமைப்பின் சுற்றுலாப் பணிக்குழு கூட்டம் வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி, பயங்கரவாதிகள், அவர்களது ஆதரவாளர்கள், நிதியுதவி செய்பவர்கள் ஆகியோருக்கு எதிரான வேட்டையை புலனாய்வு முகமை முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், 2021 நவம்பரில் கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகள் தொடர்பில் மும்பையில் நேற்று முன்தினம் அலுவலகங்கள், வீடுகள் என ஆறு இடங்களில் என்ஐஏ அதிரடிச் சோதனை மேற்கொண்டது.

