செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
31976d37-bfc1-4f40-861b-3fbc44d24107
-

ராகுலுக்கு சிறைத் தண்டனை விதித்த

நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு

புதுடெல்லி: அவதூறு வழக்கில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு அண்மையில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதித்துறை நடுவர் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார். இந்த நிலையில், நீதிபதி எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதித்துறை நடுவர்களுக்கு மாவட்ட நீதிபதிகளாகப் பதவி உயர்வு வழங்குவதற்காக குஜராத் மாநில உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வில் இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், குஜராத் மாநிலத்தில் 68 நீதித்துறை நடுவர்களுக்கு மாவட்ட நீதிபதிகளாகப் பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். மேலும் நீதிபதி ஷா மே 15ஆம் தேதி ஓய்வு பெறுவதால், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமைக்கும் வேறு ஒரு அமர்வில் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கர்நாடகத் தேர்தலில் பணப்பட்டுவாடா; கருத்துக்கணிப்பு மாறலாம்

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த புதன்கிழமை நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்காரர்கள் பண விநியோகித்தில் மும்முரமாக ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக பழைய மைசூரு பகுதியில் முதன்முதலாக வாக்களித்த இளையர்களும் முதியவர்களும் தங்களின் பொன்னான வாக்குகளைப் பணத்திற்கு விற்பனை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாக்குச்சாவடி அருகே, பணம் விநியோகிக்கும் கட்சிக்காரர்களுக்காக காத்திருந்து பேரம்பேசி பணம் பெற்ற காட்சிகள் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது. முதன்முதலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் கிட்டத்தட்ட 11.71 லட்சம் பேர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு முந்தைய நாளில் கல்புர்கி தெற்கு தொகுதியில் உள்ள சங்கமேஷ் காலணியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர், இரண்டு வாகனத்தில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகித்தனர். இதுபற்றி மாவட்ட ஆட்சியர் யஸ்வந்த் குருகருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலானோர் பணத்திற்காக வாக்களித்துள்ளதால் கருத்துக்கணிப்பு முடிவுகளில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.