அமராவதி: ஆந்திராவில் ஏறத்தாழ நூறாயிரம் விவசாயிகளுக்கு இலவச நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
12 ஆண்டுகளுக்கு மேல் நிலத்தை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு அந்த நிலத்துக்கான பட்டாவை வழங்குவது என ஆந்திர அரசு அண்மையில் முடிவு செய்தது. இதற்காக அம்மாநில சட்டப்பேரவையில் சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் நிலப்பட்டாவை பெறுவதற்கு தகுதியுள்ள விவசாயிகள் அடையாளம் காணப்பட்டனர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே சரியான உரிமையாளர் அறியப்படாத நிலங்களாக ஆந்திராவில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவை 'புள்ளியிடப்பட்ட நிலங்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த நிலங்களுக்கான பட்டாக்கள்தான் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பட்டா வழங்கப்பட்ட நிலங்களின் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றார்.
இதனால் 97,471 குடும்பங்கள் பயனடையும் என்றும் பத்திரப்பதிவு கட்டணமாக மட்டுமே ரூ.8,000 கோடி செலவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

