புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண்களைத் தாக்கிய ஆடவருக்கு அந்நிறுவன விமானங்களில் பயணம் மேற்கொள்ள இரண்டாண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று டெல்லியில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டது. அந்த விமானத்தில் ஜஸ்கிரத் சிங் பட்டா என்ற 25 வயது இளையரும் பயணம் மேற்கொண்டார்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த அவர், விமானத்தின் கதவைத் திறக்க முயன்றதாகத் தெரிகிறது.
இதைக் கண்டு பதறிப்போன விமான பணிப்பெண்கள் இருவர் அவரை தடுத்தனர். ஆத்திரமடைந்த ஜஸ்கிரத் சிங் விமான ஊழியர்களை ஏசியதுடன், அவ்விரு பணிப்பெண்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து மற்ற பயணிகளின் உதவியோடு அவர் கட்டுப்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஏர் இந்தியா நிறுவனம், ஜஸ்கிரத் சிங் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய தடை விதித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்
இதற்கிடையே மற்றொரு சம்பவத்தில் விமானியின் அறையில் பெண்ணை அனுமதித்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட விமானியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் அதன் விமானி, தனது தோழி ஒருவரை விமானிகளின் அறையில் (காக்பிட்) அமர வைத்து இருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம், பாதுகாப்பு விதிமீறலை காரணம் காட்டி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

