மும்பை: போதைப்பொருள் தொடர்பான வழக்கில் இருந்து இந்தி முன்னணி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட அதிகாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் சிக்கினார் ஆர்யன்கான்.
ஒரு சொகுசுக் கப்பலில் போதைப்பொருளுடன் கூடிய விருந்து நடைபெற்றபோது, ஆர்யன்கானும் அங்கிருந்தார். இந்த விருந்து நிகழ்வு குறித்து தகவலறிந்த மும்பை போதைப்பொருள் தடுப்புப் படையினர் அதிரடியாக அந்தக் கப்பலுக்குள் நுழைந்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக 25 வயதான ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார். இது இந்தித் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது ஆர்யன்கான் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் இடம்பெறவில்லை. இதனால் சர்ச்சை வெடித்தது.
போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிக்க சில தரப்பினர் முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது.
குறிப்பாக ஐஆர்எஸ். அதிகாரி சமீர்வான்கடே தலைமையில் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில் உள்ள பல குறைபாடுகளை, போதைப்பொருள் தடுப்பு படையின் சிறப்பு புலனாய்வுக் குழு கண்டுபிடித்தது. மேலும், ஆர்யன்கானை விடுவிக்க வேண்டுமானால் தமக்கு ரூ.25 கோடி லஞ்சம் தர வேண்டுமென சமீர் வான்கடே கோரியதும் அம்பலமானது.
இது தொடர்பாக சமீர் வான்கடே உள்ளிட்ட ஐந்து பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டதுடன், அவர்கள் மீது சிபிஐ வழக்கும் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக மும்பை, டெல்லி, ராஞ்சி, கான்பூர் என 29 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டு மே மாதம் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையில் இருந்து சென்னையில் வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவின் தலைமை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார் சமீர்.