செய்திக்கொத்து

2 mins read
b0cf7a72-321a-4415-b99d-8fa0e60a8df5
-

மீனவர்களை விடுவித்த பாகிஸ்தான்

புதுடெல்லி: இந்திய மீனவர்கள் 198 பேரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. இவர்கள் அனைவரும் இரு நாடுகளின் எல்லையில் உள்ள வாகா பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக் கப்பட்டனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தங்களு டைய மீன்பிடி படகுகளை பாகிஸ்தானிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும்் என மீனவர்கள் கோரியுள்ளனர்.

கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் போது ஐந்து தொழிலாளர்கள் பலி

மும்பை: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வியாழக்கிழமை மதியம் அங்குள்ள பண்ணையில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ஆறு தொழிலாளர்கள் அதற்குள் இறங்கினர். அப்போது திடீரென அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஆறு பேரும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஐந்து பேர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு தொழிலாளியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கேரள படகு விபத்து தொடர்பாக மேலும் ஒருவர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் 22 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த படகு விபத்து தொடர்பில் மேலும் ஒருவர் கைதாகி உள்ளார். மலப்புரம் பகுதியில் அண்மையில் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஏற்கெனவே ஒன்பது பேர் கைதாகி இருந்தனர். படகு உரிமையாளர் நாசர் உட்பட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். படகின் உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவாகியுள்ளது.

இருக்கை பட்டை ஒலி: ஐந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை

புதுடெல்லி: இருக்கை பட்டை அணியாதபோது ஒலிக்கும் எச்சரிக்கை ஒலியை நிறுத்தும் கருவியை இணையம் வழி விற்பனை செய்த ஐந்து நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை ஒலியை தொந்தரவாக கருதும் பயணிகள் சிலர் அதை தடுக்கும் விதமான கருவிகளை (கிளிப்) வாங்கி பொருத்திக் கொள்கிறார்கள். இந்த கருவிகள் இணையத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன. இந்த ஐந்து நிறுவனங்களும் இதுவரை 13,118 கருவிகளை விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது. இக்கருவியைப் பயன்படுத்தியவர்கள் பலர் விபத்துகளில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்களுக்கு இருக்கைப் பட்டை கட்டுப்பாட்டுக் கருவிகளை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க மறுத்துள்ளன. இதையடுத்து ஐந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யலாம்

புதுடெல்லி: இனி இணையம் வழி வழக்குகளை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. இதற்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய செயலியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி வைத்துள்ளார். நாடு முழுவதும் இணையம் வழி வழக்குகளைத் தாக்கல் செய்வதையும் இணையம் மூலம் நீதிமன்றச் செயல்பாடுகள் நடைபெறுவதையும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஊக்குவித்து வருகிறார்.