திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தின் கொச்சியில் 2,500 கிலோ மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் 12,000 கோடி ரூபாய் (சுமார் 1.45 பில்லியன் டாலர்).
கொச்சி அருகே கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தப் படுவதாக தகவல் கிடைத்ததால் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, இந்திய கடற்படையுடன் இணைந்து அதிரடிச் சோதனை நடத்தியது.
அப்போது அவ்வழியாக வந்த கப்பலை மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டதில் சுமார் 2,500 கிலோ மெத்தாம்பீடமைன் எனும் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பபட்டது.
இதன் தொடர்பில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஈராக்கிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இந்த போதைப்பொருள் கடத்தப்படவிருந்ததாகவும் அவர்கள் கூறினர். இது, இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் குமார் சிங் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து கடல் வழியாகக் கடத்தப்படும் போதைப் பொருளை இலக்காகக்கொண்ட 'சமுத்ராகுப்தா' நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கையின்கீழ் இதுவரை 3,200 கிலோ மெத்தாம்பீடமைன், 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

