ஹைதராபாத்: 'ஆப்பிள்' மின்னணுக் கருவிகளைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் முதற்கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யவுள்ளது.
இதன்மூலம் 25,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அம்மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப, மின்னணுவியல் மற்றும் தொடர்புத் துறைகளுக்கான அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.
'கேடிஆர்' என அழைக்கப்படும் அவர், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் ஹைதராபாத்தை ஒட்டி, ரங்க ரட்டி மாவட்டத்தில் கொங்கர் கலான் பகுதியில் ஃபாக்ஸ்கான் ஆலை நிறுவப்படும். புதிய ஆலை உலகத்தரம் வாய்ந்த பொருள்களை உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாக விளங்கும் என்றும் அந்த ஆலை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் உலகளாவிய விரிவாக்க உத்தியில் ஒரு மைல்கல் என்றும் தெலுங்கானா அரசாங்கமும் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
உலகின் முன்னணி ஐஃபோன் தயாரிப்பாளராக ஃபாக்ஸ்கான் விளங்குகிறது. தைவானின் தைப்பே நகரில் அதன் தலைமை யகம் செயல்பட்டு வருகிறது.அதன் பெரும்பாலான ஆலைகள் சீனாவில் அமைந்துள்ளன. இந்நிலையில், அமெரிக்கா-சீனா வுக்கு இடையில் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் ஃபாக்ஸ்கான் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிவருகிறது.