கர்நாடகா அமைச்சரவை வரும் 18ஆம் தேதி பதவியேற்பு; ஐந்து வாக்குறுதிகளும் நிறைவேறும்
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கப் போவது உறுதியாகியுள்ள சூழலில், முதல்வர் நாற்காலியைக் கைப்பற்ற சித்தராமையாவுக்கும் டி.கே.சிவக் குமாருக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது.
இவர்களில் ஒருவரை முதல்வ ராகத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை வரும் 18ஆம்தேதி பதவியேற்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி நீடிக்கும் நிலையில், நேற்று பிற்பகல் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றார் முன்னாள் முதல்வர் சித்தராமையா.
நேற்று தனது 61வது பிறந்த நாளைக் கொண்டாடிய டி.கே. சிவக்குமார் கூறுகையில், "நான் டெல்லி செல்லவில்லை. என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்துவிட்டேன். இன்று எனக்குப் பிறந்தநாள் என்பதால் விழாக்கள், பூசை களில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருக்கிறேன். புதிய முதல்வர் யார் என்ற முடிவை டெல்லி தலைமையிடம் விட்டுவிட்டோம், அவர்கள் முடிவு எடுப்பார்கள்," என்று கூறினார்.
சித்தராமையாவின் மகன் யதீந்திரா சித்தராமையா, தனது தந்தைக்குத்தான் முதல்வர் பதவி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இருவரின் ஆதரவாளர்களும் சுவரொட்டிகள் மூலம் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அனுபவம் வாய்ந்த சித்த ராமையா முதல்வராக வரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்த வெற்றிக்கு மூலக்காரணமே சிவக்குமாரின் கடும் உழைப்புதான் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்சிக்காக தியாகங்கள் செய்த சிவக்குமாருக்கு உயர்ந்த பதவி வழங்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இவர்களில், சித்தராமையா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டால், டி.கே.சிவக்குமார், எம்.பி. பாட்டீல், பரமேஸ்வரா ஆகிய மூவரையும் துணை முதல்வராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகத் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட ஐந்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதி கூறியுள்ளார்.

