ம.பி.: முதலமைச்சர் சவுஹான் முன்பு குழந்தையைத் தூக்கி வீசிய ஆடவர்

ம.பி.: முதலமைச்சர் சவுஹான் முன்பு குழந்தையைத் தூக்கி வீசிய ஆடவர்

2 mins read
0c8663d5-2d9b-48fc-a249-c64c878acc2d
-

போபால்: மத்­தியப் பிர­தேச மாநி­லத்­தின் முதல்­வர் சிவ்­ராஜ் சிங் சவு­ஹான், சாகர் நக­ரில் நடந்த ஒரு சமூ­கத்­தி­ன­ரின் மாநாட்­டில் பேசிக்­கொண்­டி­ருந்­த­போது, அவர் இருந்த மேடை­யில் திடீ­ரென ஒரு குழந்தை வந்து விழுந்து பர­பரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

முகேஷ் பட்­டேல் என்று அடை­யா­ளம் காணப்­பட்ட ஆட­வர் ஒரு­வர், தனது ஒரு வயது மக­னைத் தூக்கி, முத­ல­மைச்­சர் சவு­ஹான் பேசிக்­கொண்­டி­ருந்த மேடையை நோக்கி வீசி எறிந்­த­தாக உள்­ளூர்­வா­சி­கள் சிலர் தெரி­வித்­த­னர்.

மேடைக்­க­ருகே காவல் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த தலைமைக் காவலர் ஒரு­வர், அதி­ர­டி­யாக மேடைக்­கு­வந்து அந்­தக் குழந்­தை­யைத் தூக்கி, அக்­கு­ழந்­தையை அங்கு நின்­றி­ருந்த தாயி­டம் ஒப்­ப­டைத்­தார். நல்­ல­வே­ளை­யாக குழந்­தைக்கு எவ்­வி­தப் பாதிப்­பும் ஏற்­ப­ட­வில்லை.

அந்­தச் சம்­ப­வத்­தால் அங்கு சற்­று­நே­ரம் பர­ப­ரப்­பான சூழல் நில­வி­யது. மேடை­யில் இருந்த முத­ல­மைச்­சர் வேக­மாக கீழே இறங்கி அக்­கு­ழந்­தை­யின் பெற்­றோ­ரி­டம் சென்று, ஏன் இவ்­வாறு செய்­தீர்­கள் என்று கேள்வி எழுப்­பி­னார்.

அதற்­குப் பதி­ல­ளித்த முகேஷ் பட்­டேல், தனது குழந்­தை­யின் இத­யத்­தில் இரண்டு ஓட்­டை­கள் உள்­ள­தா­க­வும், அவ­னுக்கு உட­ன­டி­யாக சிகிச்சை மேற்­கொள்ளா விட்­டால் அவ­னு­டைய உயி­ருக்கே ஆபத்து என்றும் மருத்துவர்கள் கைவி­ரித்­து­விட்­ட­னர் என்றார். "கடந்த ஆறு மாத கால­மாக உதவி­கேட்டு ஏறி­இ­றங்­காத அலு­வ­ல­கமே இல்லை. இருந்­தும் மக­னுக்­குச் சிகிச்சை அளிக்க நிதி­உதவி செய்ய யாரும் முன்­வந்­த­பா­டில்லை.

"என­வே­தான் தங்­க­ளைப் பார்த்­தா­லா­வது மக­னுக்கு விடி­வு­கா­லம் பிறக்­கும் என்று இங்கு வந்­தேன். ஆனால், மேடைக்கு அருகே நான் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. உங்­கள் கவ­னத்தை ஈர்க்­கவே என் பிள்­ளையை மேடையை நோக்கி தூக்­கி­யெ­றிந்­தேன்," என்று கண்­க­லங்­கக் கூறி­னார். அதைக்­கேட்ட முத­ல­மைச்­சர் சவு­ஹான், அந்த ஆட­வ­ருக்கு ஆறு­தல் கூறி­விட்டு, உட­ன­டி­யாக அங்­கி­ருந்த ஆட்­சி­யர் தீபக் ஆர்­யாவை அழைத்து, அந்­தக் குழந்­தை­யின் சிகிச்­சைக்­குத் தேவை­யான உத­வி­யைச் செய்ய ஆவன செய்­ய­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார். கூலி வேலை செய்­யும் முகேஷ் பட்­டேல் சாஹாஜ்­பூ­ரைச் சேர்ந்­த­வர். தனது உழைப்­பில்­தான் வய­தான அம்மா, மனைவி, ஐந்து வயது மகன், ஒரு வயது நரேஷ் ஆகி­யோ­ரைக் காப்­பாற்ற வேண்­டும். இருந்­தும் மக­னின் முதல் கட்­டச் சிகிச்­சைக்­காக அவர், தம்மால் இயன்றவரை செலவு செய்­துள்­ளார். கடை­சி­யாக மக­னுக்கு ஏற்­பட்­டுள்ள இத­யப் பிரச்­சி­னை­யைத் தீர்க்க வேண்­டு­மெ­னில் கிட்­டத்­தட்ட நான்கு லட்ச ரூபாய் செல­வா­கும் என்று தெரிந்­த­தும்­தான் அவர் பல இடங்­களில் உதவி கேட்­டு மன்றாடினார்.

அந்­தச் சிறு­வ­னுக்கு ஜூன் 2ஆம் தேதி போபா­லில் உள்ள சித்­தாந்தா மருத்­து­வ­ம­னை­யில் தேவை­யான சிகிச்சை அளிக்­கப்­படும் எனத் தெரிகிறது.