இம்பால்: மணிப்பூரில் கலவரத்தால் ஏராளமானோர் அண்டை மாநிலமான மிசோரமில் தஞ்சமடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதே, குக்கி சமுதாய மக்களிடையே கடந்த மே 3ஆம் தேதி மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அந்தக் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன.
ராணுவம், துணை ராணுவம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 45,000க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மணிப்பூரில் வசிப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தால் குக்கி, சின், மிசோ சமூகங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 5,800 பேர் மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் அந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பல நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சொந்த மாநிலத்திற்குத் திரும்பிச்செல்ல அவர்கள் அஞ்சுவதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி உள்ளிட்ட சமுதாய மக்களுக்காக தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் 7 பேர் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மணிப்பூர் முதல்அமைச்சர் பிரேன் சிங், "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவுரையின்படி மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
"இதற்காக அமைதி நல்லிணக்கக் குழுக்கள் உருவாக்கப்படவுள்ளன. போராட்டங்களைக் கைவிட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும். அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
"மணிப்பூர் மாநிலத்தைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்கும் கோரிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது,'' என்று தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை சூராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள தோர்பங் என்னும் சிற்றூரில் மேதே மக்கள் வாழும் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதோடு பல இடங்களில் வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டது.
சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு வன்முறைக்குப் பிறகு பதற்றமான பகுதிகளுக்கு மேலும் ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
அந்தச் சிற்றூரில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.