பயங்கரவாதம், போதைப்பொருள், குண்டர் கும்பல்களை நசுக்க அதிரடி முயற்சி
புதுடெல்லி: இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவை (என்ஐஏ) நேற்று ஆறு மாநிலங்களில் 122 இடங்களில் சோதனைகளை நடத்தியது.
பாகிஸ்தான், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் தளம் கொண்டு செயல்படும் பயங்கரவாத குழுக்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குண்டர்கும்பல் பேர்வழிகள் ஆகியோருக்கு இடையே தொடர்புகள் இருப்பதாக கூறப்படுவதன் பேரில் அந்தச் சோதனைகளை அதிகாரிகள் நடத்தினார்கள்.
அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிதேசம், உத்ரகாண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சந்தேகத்திற்கு இடமான சில வீடுகளில் இந்த முகவையின் அதிகாரிகள் அதிகாலை 4 மணி முதலே சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த ஆறு மாநிலங்களிலும் தளம் கொண்டு செயல்படும் குண்டர் கும்பல்களையும் சட்டவிரோத கட்டமைப்புகளையும் துடைத்தொழிப்பதற்காக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்த முகவை தெரிவித்தது.
பயங்கரவாத கட்டமைப்புகளையும் அந்த அமைப்புகளுக்கு பணம் கிடைக்கக்கூடிய வழிகளையும் ஆதரவு அளிக்கும் உள்கட்டமைப்பு வசதிகளையும் நிலைகுலையச் செய்யும் நோக்கத்தில் இந்த முகவை தொடர்ந்து பல கோணங்களிலும் புலன்விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
கனடாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் லாண்டா என்ற லக்பிர் சிங், பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் ஹர்விந்தர் சிங் ரிண்டா, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் குர்பந்வாந்த் சிங் பானு ஆகிய குண்டர்கும்பல் தலைவர்களுக்கு எதிராக சென்ற ஆண்டு ஆகஸ்டில் இந்த முகவை வழக்கு பதிந்தது.
இந்த முகவை 19 சந்தேகப்பேர்வழிகளை ஏற்கெனவே கைது செய்துள்ளது.