திருப்பதி: ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விருந்து நிகழ்ச்சி ரகளையில் முடிந்து கை முறிந்தும் மண்டை உடைந்தும் ஐவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மணமகன், மணமகள் வீட்டார் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்போனபோது அங்கேயும் ரகளை ஏற்பட்டதால் அதிகாரிகள் தலையிட்டு அவர்களை எச்சரித்து ஒடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறின.
தாலி கட்டிக்கொண்ட மணமகள், மணமகனுடன் சேர்ந்து குத்தாட்டம் ஆடிக்கொண்டே விருந்து கூடத்திற்கு வர மறுத்துவிட்டதே இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம்.
ராமச்சந்திரபுரம் என்ற நகரில் உள்ள காவல்துறையில் தாக்கலான புகாரில் பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.
ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்கும் கஜ்ரம் என்ற ஊரைச் சேர்ந்த பூஜிதா என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்ததை முன்னிட்டு திங்கட்கிழமை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.
அந்நிகழ்ச்சியின்போது ஆடல் பாடல் என மண்டபம் களை கட்டியது. அடுத்த நாள் காலையில் பூஜிதா கழுத்தில் சுப்பிரமணியம் தாலிகட்டினார்.
திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது மணமகனும் மணமகளும் குத்தாட்டப் பாட்டிற்கு நடனமாடியபடியே விருந்து கூடத்திற்கு வரவேண்டும் என்று சுப்பிரமணியம் வீட்டார் கேட்டனர்.
ஆனால், தனக்கு நடனம் ஆடத் தெரியாது என்று மணப்பெண் மறுத்துவிட்டார். பெண்ணின் உறவினர்களும் அவ்வாறே கூறிவிட்டனர்.
இதனால் மணமகன், மணமகள் வீட்டாருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு கைகலப்பாக மாறியது.
சுப்பிரமணியத்தின் உறவினர்கள் நாற்காலிகளைத் தூக்கி வீசி பூஜிதாவின் உறவினர்களைத் தாக்கினர். இதனால் ஒரு மாதுக்கு மண்டை உடைந்தது. வேறொருவருக்கு கை உடைந்தது. இதர மூவர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதையடுத்து இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுக்க காவல்நிலையத்தில் குவிந்ததால் அங்கேயும் ரகளை ஏற்பட்டது.

